தஞ்சாவூர்: அதிமுக பிரமுகர் பிரபு வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து திருக்காட்டுபள்ளி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியை அடுத்த மைக்கேல்பட்டி பாம்பாளம்மன் கோவில் அருகில் வசித்து வந்தவர் பிரபு (வயது 38). இவர் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர். மேலும், நகர அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும் இருந்து வந்துள்ளார்.
இத்துடன் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பிளக்ஸ் அடித்து தரும் பணியையும் இவர் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 15) இரவு இவர் தன் பணிகளை முடித்துவிட்டு பழமார்நேரி சாலையில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு அருகில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் ஒன்று பிரபுவை சரமாரியாக தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தனியார் பள்ளி நடன ஆசிரியருக்கு அடி உதை!
மேலும் கொலை நடந்த இடத்திற்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், திருவையாறு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமதாஸ், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் பிரபு கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பிரபுவுக்கு சரண்யா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவத்தால் அப்பகுதி பதற்றமாகவும் பரபரப்பாகவும் காணப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, நேற்று இரவு பிரபு மேல் மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இந்தக் கொலை குற்ற சம்பவம் தேர்தல் முன்விரோதம் காரணமாக நடைபெற்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உடனடியாக போலீசார் குற்றவாளிகளை கைது செய்து வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் பிரபு என்பவருக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் ஏற்கனவே தேர்தல் முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் போலீஸ் விசாரணைக்குப் பின்பே கொலைக்கான காரணங்கள் குறித்து முழு விபரமும் தெரியவரும்.
இதையும் படிங்க: "மாணவர்களிடம் ஜாதி மோதலை ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் திணிக்கின்றன" - திருமாவளவன் குற்றச்சாட்டு!