திருவாரூர் நகரில் துர்காலயா ரோடு, வஉசி தெரு, கமலாம்பாள் நகர், அவ்வை நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீர் வாந்தி, பேதி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இவர்களுக்கு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில், ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மருத்துவமனையில் நடத்திய பரிசோதனையில் அசுத்தமான குடிநீரைக் குடித்ததால்தான் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது என்பதும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அனைவரும் மாநகராட்சி குடிநீரைக் குடித்ததும் தெரியவந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "குடிநீருடன் கழிவுநீர் கலந்துவருகிறது. இந்தத் தண்ணீரைக் குடித்ததால்தான் அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. உடனடியாகக் குடிநீரில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து நிறுத்தி சுகாதாரமான குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.