தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மன்னார்குடியில் அதிக வட்டி தருவதாக ரூ.1.5 கோடி மோசடி - தம்பதி மாயம்! - 1.5 crore cheating in mannarkudi

திருவாரூர்: மன்னார்குடியில் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தைக் கூறி 21 பெண்களிடம் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கணவருடன் தலைமறைவானதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மன்னார்குடியில் பண மோசடி

By

Published : Aug 17, 2019, 11:39 AM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த மேகலாதேவியும் (35), அவரது கணவர் ஜெயபிரகாஷும் (45) துணி வியாபாரம் செய்துவந்தனர். மேகலாதேவி தன்னிடம் நெருங்கிப் பழகிய பெண்களிடம் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக துணிக்கடை வைத்து அதில் அனைவரும் பங்குதாரராக செயல்படுவோம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, தானும் தனது கணவரும் சேர்ந்து ஃபைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுவருவதாகவும் தன்னிடம் பணம் கொடுத்தால் அதற்கு அதிகளவில் வட்டி கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய கவிதா, ஜெயக்கொடி, தனலெட்சுமி, ஆனந்தி, அருக்காணி உள்ளிட்ட 21 பெண்கள் இரண்டு லட்சம் முதல் 15 லட்சம் வரை மொத்தம் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் வரை மேகலாதேவியிடம் கொடுத்துள்ளனர்.

ஒருவரிடம் பணம் பெற்ற விஷயம் அடுத்தவருக்கு தொியாமல் மேகலாதேவி பார்த்துக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில் வட்டிப் பணம் கொடுத்த மேகலாதேவி பல மாதங்களாக வட்டிப் பணம் கொடுக்காததால் சந்தேகமடைந்த பணம் கொடுத்தவர்கள் தங்களுடைய வட்டியையும் அசல் பணத்தையும் உடனே திருப்பிக்கொடுக்குமாறு அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். அதனால் கடந்த ஜூலை 18ஆம் தேதி மேகலாதேவி விஷம் அருந்தியதாகத் தெரிகிறது.

இதனையறிந்த பணம் கொடுத்த பெண்கள் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மேகலாதேவியை சந்தித்து தங்களது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். இதன் காரணமாக, ஜூலை 20ஆம் தேதி இரவே மருத்துவரின் அனுமதியின்றி மேகலாதேவி கணவருடன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பணம் கொடுத்த பெண்களில் ஒரு பிரிவினர் மன்னார்குடி காவல் நிலையத்திலும் மற்றொரு பிரிவினர் திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மேகலாதேவி, அவரது கணவர் மீது மோசடி புகார் கொடுத்தனர்.

புகார் கொடுத்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் தங்களது புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்ததையடுத்து, மன்னார்குடி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின்பேரில் தேவங்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details