திமுக தலைவர் ஸ்டாலின், திருவாரூரில் போட்டியிடும் வேட்பாளர்களான பூண்டி. கலைவாணன், மன்னார்குடி தொகுதி டீ.ஆர்.பி. ராஜா, நன்னிலம் தொகுதி ஜோதிராமன், திருத்துறைப்பூண்டி தொகுதி மாரிமுத்து ஆகியோரை திருவாரூர் அறிமுகம் செய்து வைத்து, தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது பேசிய ஸ்டாலின், “கடந்த மக்களவைத் தேர்தலின்போதும் திருவாரூரில்தான் பரப்புரையை தொடங்கினேன். சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இங்குதான் தொடங்கப்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலை போல சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை தேடித் தரவேண்டும். கடந்த மாதம் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறினேன் இன்றைய நிலையில், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலை உள்ளது. இதனை பத்திரிகையாளர்களே கூறிவருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டை சீரழித்து வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டபோது பன்னீர்செல்வம் ஆட்சியில் இருந்தார். வழக்கு பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால் 5 ஆண்டுகாலம் ஜெயலலிதா இருக்கும்போதே வீணடிக்கப்பட்டது. பின்னர் வந்த ஐந்து ஆண்டு காலத்தில் உடல் நலிவுற்று மறைந்தார். அதனையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறார்.