திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூரில் அதிமுக சார்பில் நிவாரண உதவிகளை அமைச்சர் காமராஜ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ்; தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துவரும் சீரிய நடவடிக்கைகள், ஆய்வுகள், ஆலோசனைகள் போன்றவற்றால் தமிழ்நாட்டில் கரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் கோயம்பேடு பகுதியில் இருந்து வந்த ஆயிரம் நபர்களில் இருவருக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பதாகவும், அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாகவும், அவர்களில் 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 3 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
அதனைத்தொடர்ந்து, சிகிச்சை பெறும் மூவரும் இன்னும் சில நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப இருப்பதால், திருவாரூர் மாவட்டமும் விரைவில் பச்சை மண்டலமாக மாறும். குறிப்பாக, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 2 லட்சத்து 96 ஆயிரம் பேரில், 2 லட்சத்து 25 ஆயிரம் பேரிடம் அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்த்துள்ளதாகவும், இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை 80 விழுக்காடு பேர் பெற்று விட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் காமராஜ், ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கரோனா தொற்று முடிந்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அதிமுக சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 3 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று ஒரே நாளில் கோட்டூர், முத்துப்பேட்டை, பெருகவாழ்ந்தான், கூத்தாநல்லூர் உள்ளிட்டப் பகுதிகளில் 3 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
முடிவில், கோயம்பேடு பகுதியிலிருந்து கரோனா தொற்று பரவியதாக முதலமைச்சர் கூறவில்லை என்றும், அவர் பேசியது திரித்து கூறப்படுவதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க:பிரதமரை விமர்சித்த திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!