திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் 91 பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 551 மாணவ மாணவிகளுக்கு சுமார் 4 கோடியே 15 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்குத் தேவையான இடங்களில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதால் நெல் கொள்முதலில் பிரச்னைகள் இல்லை எனவும் தெரிவித்தார்.