தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த இருசக்கர வாகனத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2018ஆம் ஆண்டு செயல்படுத்தினார்.
இத்திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் வாங்க 50 விழுக்காடு மானியம் அல்லது 25 ஆயிரம் ரூபாய் இதில் எது குறைவோ அத்தொகையை அரசு வழங்க திட்டமிட்டது. இந்தத் திட்டத்தை பெற விரும்புபவர்கள் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவராக இருக்க வேண்டும். 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை விதித்தது.
பெண்களுக்கு வழங்கப்பட்ட இருசக்கர வாகனம் அதன்படி விண்ணப்பிக்கப்படும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு 2017-18ஆம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களை வழங்கிவருகிறது. இந்நிலையில், இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆதரவற்ற, விதவை, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 2019ஆம் ஆண்டிற்கான இருசக்கர வாகனம் 715 பயனாளிகளுக்கு 178.75 லட்சம் மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனங்களை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் காமராஜ், "ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு முழு முயற்சியுடன் செயல்பட்டது.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஒரு உயிரிழப்பில் அரசியல் செய்துவருகிறார். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருக்கும்போது தனக்கு தெரிந்த ஆலோசனையை எதிர்க்கட்சித் தலைவர் அப்போது வழங்கிருக்கலாம். சுஜித் எப்போது இறப்பான், என காத்திருந்து கருத்து சொல்வது தவறான செயலாகும்" என்று ஸ்டாலினை விமர்சித்துப் பேசினார்.