திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு நாணய சிக்கன சங்கத்தில் மூவாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் காப்பீட்டு செய்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகை பாலசுப்பிரமணியன் என்ற விவசாயிக்கும் அவரது மனைவிக்கும் கிடைக்கவில்லை.
இது குறித்து சென்னையில் உள்ள பயிர் காப்பீட்டு அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்த போது, மிகக் குறைந்த அளவிலான தொகையை இவர்களுக்கு வந்திருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் 2019- 2020 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையும் இவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இது குறித்து அலுவலர்களிடத்தில் கேட்டாலும் பல காரணங்களை கூறி தட்டிக் கழித்துள்ளனர்.
இதில் மூவாநல்லூரில் செயல்படும் கூட்டுறவு நாணய சிக்கன சங்கத்தில் பணிபுரியும் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் உள்ளிட்டோர் இணைந்து பயிர் காப்பீட்டு தொகையில் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் மோசடி செய்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க...'நகரா டாக்சிகள்.. வாழ்விழந்த டிரைவர்கள்'- கண்டுகொள்ளுமா அரசு!