திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்களைக் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் ஆய்வு செய்தார். பின்னர் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பருவம் மாறிய வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் முற்றிலும் அழிந்து நாசமாகிவிட்டன. கண்முன்னே பயிர்கள் அழிவதைப் பார்த்து விவசாயிகள் கிராமங்கள் தோறும் பரிதவிக்கின்றனர். பொங்கல் விழாவும் களையிழந்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே நிவர், புரெவி புயல் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து ஒரு சில கிராமங்கள் தவிர்த்து மற்ற கிராமங்களில் எல்லாம் 20 சதம் 30 சதம் 50 சதம் 70 சதம் என்ற சதவீத அடிப்படையில் கிராமத்திற்கு கிராமம் வேறுபாடாக பாதிப்பு கணக்கிடப்பட்டு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் அனைத்து கிராமங்களும் முற்றிலும் அழிந்து விட்டதால் மறு கணக்கெடுப்பு நடத்தி 100% இழப்பீட்டுத் தொகையை அனைத்து கிராமங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் காப்பீட்டிற்கான இழப்பீட்டு தொகையை 100 சதவீதம் முழுமையாக விவசாயிகளுக்கு வறட்சிக்கான இழப்பீட்டு தொகையை முழுவதும் பெற்றுக்கொடுத்தார். இதனால் விவசாயிகள் தற்கொலையில் நிலையிலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள்.
தற்போது பருவம் மாறிய மழையால் சம்பா அழிந்துவிட்டதால் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழு இழப்பீடு பெறுவதற்கு அம்மையார் ஜெயலலிதா அவர்களின் வழியை பின்பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மார்ச் மாதத்திற்குள் பெற்றுத் தருவேன் என்கிற உறுதியை விவசாயிகளுக்கு அளித்திட வேண்டும். அதற்கான வகையில் மத்திய அரசு மற்றும் காப்பீட்டு நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி மழையின் அளவை கணக்கிட்டு மாவட்ட அளவிலான பாதிப்பின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை முழுமையும் பெற்றுத் தர முன்வரவேண்டும்.