திருவாரூர்:குவைத் நாட்டிற்கு வேலைக்குச்சென்ற, திருவாரூர் மாவட்டம்,கூத்தாநல்லூர் லட்சுமாங்குடி பகுதியைச்சேர்ந்த முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது உடலை மீட்டுத்தரக்கோரி தாலுகா அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று மனு அளித்துள்ளனர்.
கூத்தாநல்லூர் தாலுகா, லட்சுமாங்குடி பகுதியைச்சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் தனது பிள்ளைகளின் படிப்பிற்காகவும் காய்கறி கடை நடத்தி அதில் ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்கும் வெளிநாடு செல்ல முடிவெடுத்து, ஏஜென்ட் மோகனா என்ற ஆந்திரப் பெண்ணைத்தொடர்புகொண்டு குவைத் நாட்டிற்கு செப்டம்பர் 3ஆம் தேதி சென்றார்.
அதன்பிறகு அவர் வீட்டில் தொடர்பு கொண்டு குவைத் வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அதன் பிறகு அவர் தான் எந்த வேலைக்காக அழைத்து வரப்பட்டோமோ அந்த வேலையை செய்யமுடியாமல், ஆடு, ஒட்டகம் ஆகியவற்றை மேய்த்ததாகவும் பாலைவனத்தில் அங்குள்ள குவைத் முதலாளி செய்த கொடுமைகள் குறித்தும் தனது வீட்டிலும், ஏஜென்ட் மோகனாவிடமும் தெரிவித்துள்ளார்.
மேலும் உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப வேண்டுமென கடந்த ஏழாம் தேதி கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ஏழாம் தேதி இரவு அங்கு பணியாற்றும் அதே ஊரைச்சேர்ந்த நண்பர் ஒருவரிடம் அவர் அங்குள்ள துயரங்கள் குறித்து போனில் பேசிக்கொண்டிருக்கையில், திடீரென போனை உடைக்கும் சத்தம், அவர் நண்பருக்கு கேட்டுள்ளது.
அதன்பிறகு முத்துக்குமரனுக்கு அவருடைய நண்பர் தொடர்புகொண்டு பேச முயற்சித்தபோது, அவரை தொலைபேசியில் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது குவைத் முதலாளிகள் அவரை கடுமையாகத் தாக்கி சுட்டுக்கொன்றதாகத் தெரிகிறது. அதன்பிறகு குவைத் நாட்டில் நம்பகத்தன்மை உள்ள ஊடகங்கள் துப்பாக்கியால் சுட்டு இந்தியர் உயிரிழப்பு என செய்தி வெளியிட்டது.