தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜிப்சம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

Thiruvarur Accident: திருவாரூரில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தால் தோண்டப்படும் பள்ளங்களால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதால், பள்ளங்களை முறையாக முட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tiruvarur
Tiruvarur

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 4:48 PM IST

திருவாரூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வேப்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (43). இவர் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து லாரியில் 3 லட்சம் மதிப்பிலான ஜிப்சமை ஏற்றிக்கொண்டு, அரியலூர் டால்மியா சிமெண்ட் கம்பெனி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வாழ்க்கை என்ற கிராமத்தின் அருகில் சென்று கொண்டிருக்கும் பொழுது, கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் நோக்கி மற்றொரு லாரி வந்து கொண்டிருந்துள்ளது. ஜிப்சம் ஏற்றி வந்த லாரி இடது பக்கம் திரும்ப, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சாலை ஓரம் தோண்டப்பட்டுள்ள பள்ளம் முறையாக மூடப்படாமல் இருந்ததால், லாரி அந்த பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் ராஜ்குமார் உயிர் தப்பி உள்ளார். அதே நேரத்தில், லாரியில் ஏற்றி வந்த ஜிம்சம் முழுவதும் சாலையில் கொட்டி உள்ளது. இதனைத் தொடர்ந்து, நன்னிலம் காவல் துறையினருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் பள்ளமானது தோண்டப்பட்டு, அதில் ராட்சசக் குழாய் அமைத்து வருகின்றனர். இவ்வாறு தோண்டப்படும் பள்ளத்தை முறையாக மூடாமல் செல்வதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தால் தோண்டப்படும் பள்ளங்களால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால் பள்ளங்களை முறையாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி.. ரூ.19,850 கோடியில் துவங்கி வைக்கும் திட்டப்பணிகள் என்னென்ன..?

ABOUT THE AUTHOR

...view details