கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல மாவட்டங்களில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் தென்பட்டாலும், ஹோட்டல்களில் வழக்கமான வியாபாரம் நடைபெறுவதில்லை என அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்றாடம் முதலீடு செய்த அளவுக்குக்கூட உணவுப் பொருள்கள் விற்பனை ஆகாததால், ஊழியர்களுக்கே ஊதியம் கொடுக்க முடியாமல் ஹோட்டல் நடத்துபவர்கள் திணறிவருகின்றனர்.
தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து உணவு விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற அரசின் அறிவுரைகளை பின்பற்றினாலும், கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் உணவகங்களுக்கு வராத காரணத்தால், ஹோட்டல் தொழில் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளது.
கரோனாவிற்கு முன்பு நல்ல வியாபாரம் நடந்துவந்த நிலையில், தற்போது 30 விழுக்காடு அளவிற்குக்கூட வியாபாரம் நடைபெறுவதில்லை என ஹோட்டல் உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.
வியாபாரமின்றி மூடப்படும் ஹோட்டல்கள் திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக பெரிய ஹோட்டல்கள் முதல் சிறிய ஹோட்டல்கள்வரை இன்றுவரை திறக்கப்படாமல் பல மூடப்பட்டுள்ளன. வியாபாரம் நடக்கும் என்ற நம்பிக்கையில் ஹோட்டல்களை திறந்தவர்களும் மீண்டும் அதனை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பெரிய ஹோட்டல்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், தனியார் இடங்களில் நடத்திவரும் ஹோட்டல்களுக்கு வாடகை மானியம் வழங்க வேண்டும், நகர்ப்புறப் பகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகளில் இயங்கிவரும் ஹோட்டல்களின் வாடகையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஹோட்டல் உரிமையாளர்கள் அரசுக்கு வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும் முடக்கிய கரோனா!