திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே ஆலங்குடி கிராமத்தில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாமை அமைச்சர் காமராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர்; 'புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குடும்ப அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ரேசன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட தொழிலாளர்களுக்கும் நீதிமன்ற ஆணையின்படி விரைவில் ரேசன் பொருள்கள் வழங்கப்படும்.
இரண்டு மற்றும் மூன்று நபர்கள் கொண்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி குறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வாறு எந்த அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்குவது குறைக்கப்படவில்லை. வழக்கம் போல் இரண்டு நபர்கள் கொண்ட குடும்ப அட்டைக்கு 16-கிலோ அரிசியும்; மூன்று நபர்கள் உள்ள குடும்ப அட்டைக்கு 20-கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆன்லைன் என்பது காலத்தின் கட்டாயம். உதாரணமாக, கால் நடைகளுக்கு காதுகளில் பொருத்தப்படும் டேக்கினை வைத்து இந்தியா முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் நாம் சோதனை செய்து கொள்ளலாம். கால்நடைக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என உடனடியாகப் பதிவு செய்ய ஏதுவாக உள்ளது.
உரம், வேளாண்கூட்டுறவு கடன் பெறுவது, கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவது போன்ற நடைமுறைகள் விவசாயிகளுக்கு எளிதாக்கப்படும்'' எனக் கூறினார்.