திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள குருங்குளம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் அனைத்தும் பழுதடைந்து எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
அவற்றை சரி செய்யக் கோரி கிராம மக்கள் பல முறை வட்டாட்சியர் அலுவலகம் முதல் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் வரை சென்று மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பெருங்குறையுடன் தேர்தலை புறக்கணிக்கும் குருங்குளம் - சிறப்பு தொகுப்பு அதுமட்டமின்றி அக்கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, சுடுகாடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணித்து தங்களுடைய ஒவ்வொரு வீட்டின் முன்பும் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருப்புக் கொடியுடன் குருங்குளம் கிராம மக்கள் "வாக்கு சேகரிக்க வருபவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற மறுக்கிறார்கள். தேர்தல் நேரங்களில்தான் நாங்கள் அவர்கள் கண்களுக்கு தெரிகிறோம். மற்ற நேரங்களில் அவர்கள் எங்களுக்கு கண்கட்டி வித்தை காட்டுகிறார்கள்" என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் "இனியாவது ஆட்சிக்கு வரும் நபர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.