திருவாரூர்: மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், மன்னை ஹாக்கி கிளப் நடத்தும் கோபாலகிருஷ்ணன் நினைவு மாநில அளவிலான ஹாக்கி போட்டி கடந்த ஜனவரி 6ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாள் நடந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைசிறந்த 18க்கும் மேற்பட்ட விளையாட்டு அணிகள் பங்கேற்றன.
இறுதிபோட்டிக்கு கோவில்பட்டி சென்ட்ரல் எக்சலன்ஸ் அணியும், சென்னை எஸ்.ஆர்.எம். அணியும் களமிறங்கின. இதில் கோவில்பட்டி சென்ட்ரல் எக்சலன்ஸ் அணி மூன்று கோல் அடித்து முதல் இடத்தை பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு பெற்ற கோவில்பட்டி அணிக்கு ரூ 30 ஆயிரம் ரொக்கபரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது.
மாநில அளவிலான ஹாக்கி போட்டி இரண்டாம் பரிசு பெற்ற சென்னை எஸ்.ஆர்.எம். அணிக்கு, ரூ 25 ஆயிரம் ரொக்கபரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது. 3ஆம் பரிசு பெற்ற பாண்டிச்சேரி ஹாக்கி அணிக்கு ரூ 20 ஆயிரம் ரொக்க பரிசும், கோப்பையும் வழங்கபட்டது. 4ஆம் பரிசு பெற்ற தமிழ்நாடு தபால்துறை அணிக்கு ரூ 15 ஆயிரம் பரிசு தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது.
விழாவிற்கு மன்னை ஹாக்கி கிளப் தலைவர் அசோகன் தலைமை தாங்கினார்.இதில், டிஎஸ்பி (பயிற்சி) இமயவரம்பன், மனித உரிமை பிரிவு மாவட்ட அரசு வழக்கறிஞர் கலைவாணன், அமெச்சூர் கபாடி கழக செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆசிய அளவில் வெள்ளி வென்ற சார்பட்டா சாம்பியன்: இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் வடசென்னைக்காரர்