திருவாரூர்: சம்பா அறுவடையை இழந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ஏக்கருக்கு 35 ஆயிரம் இழப்பீடாக பெற்றுத்தர வலியுறுத்தி வருகின்ற 22ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் அறிவித்துள்ளார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் மாவட்ட தலைவர் எம் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் காவிரி டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பேரழிவு பெரு மழையினால் ஏற்பட்டுள்ளது. பொங்கல் திருநாள் முதல் சம்பா அறுவடை முழுமையும் தொடங்க உள்ள நிலையில் பேய் மழையால் ஒட்டுமொத்த சம்பா பயிர்களும் கதிர் வந்து முற்றிய நிலையில் அழிந்து மண்ணோடு மண்ணாக மக்கி விட்டது. இதனைப் பார்த்து விவசாயிகள் கிராமங்களில் கண்ணீர் வடிக்கிறார்கள். கிராமப் பகுதி முற்றிலும் முடங்கி கிடக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் பேரிடர் திட்டத்தின் மூலமாக இடுபொருள் இழப்பீடாக 100 சதவீதம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35,000 பெற்றுத்தர அரசு முன்வரவேண்டும்.
அறுவடை ஆய்வு அறிக்கை என்கிற பெயரில் மோசடி செய்யும் காப்பீட்டு நிறுவனங்களை காலத்திலேயே அழைத்து பேசி நூறு சதவீத இழப்பீடு உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கடன் நிலுவை முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் விலை நிர்ணயம் செய்து நிபந்தனையின்றி அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். இதனை வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களான கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் லட்சக்கணக்கான விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் ஜனவரி 22ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” எனத் தெரிவித்தார்.
ஜனவரி 22ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! - Tiruvarur district news
ஜனவரி 22ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருத்துறைப்பூண்டியில் பிஆர் பாண்டியன் ஆய்வு