'அரசியல் கட்சிகளை விரட்டியடிப்போம்'- ஹைட்ரோகார்பன் போராளிகள் கொந்தளிப்பு! - திருவாரூர்
திருவாரூர்: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காத அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிக்க வரும்போது விரட்டியடிப்போம் என திருக்காரவாசல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் திருக்காரவாசலில் தொடங்கி கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்த நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது.
இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருக்காரவாசல் கிராம மக்கள் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினம் முதல் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதியளித்ததற்கு மத்திய அரசை கண்டித்து அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், தலையில் முக்காடு போட்டும், கை தட்டி ஓசை எழுப்பியும் தங்களது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று 17-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள், நாடாளுமன்றத்தில் இங்கிருந்து வெற்றி பெற்று சென்ற உறுப்பினர் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது தங்களுக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.
இத்திட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவத்து தமிழக அரசு சட்டப்பேரவைியல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் கிராம மக்கள் கூறுகையில், இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காத கட்சிகளை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பலப்படுத்தி அவர்கள் வாக்கு சேகரிக்க வரும்போது விரட்டியடிப்போம் என தெரிவித்தனர்.