திருவாரூர்:காட்டூர் கிராமத்தில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் வரலாற்றை பொதுமக்கள் மற்றும் திமுக கட்சியினர் அறிந்து கொள்ளும் வகையில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ''கலைஞர் கோட்டம்'' கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி நடைபெற்றது. இந்த ''கலைஞர் கோட்டம்'' மற்றும் கலைஞர் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள செய்திகளைத் தெரிந்து கொண்டனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து திமுக கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், இலவச மருத்துவ முகாம் உள்ளிட்டப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் தஞ்சாவூரில் மருத்துவ அணி சார்பில் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தஞ்சாவூர் மேம்பாலத்தின்கீழ் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியைச் சார்ந்த ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள், திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள ''கலைஞர் கோட்டத்தை'' சென்று பார்வையிட்டனர்.
அதில் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கலைஞர் கோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் குறித்தும் மற்றும் வரலாற்று செய்திகளையும் அவர்களுக்கு புரியும் வகையில் சைகை மொழியில் தெரிவித்தனர். இவற்றை மாணவர்கள் கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் கலைஞர் கோட்டத்தில் உள்ள நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படித்தனர். அங்குள்ள ஒலி, ஒளி காட்சியுடன் கூடிய திரையரங்கு ஆகியவற்றையும் பார்வையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.