தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சடலத்தை எடுத்துச் செல்ல மறுப்பு: இரு தரப்பினர் மோதலால் 15 பேர் காயம்.. கும்பகோணத்தில் நடந்தது என்ன? - Kumbakonam

கும்பகோணம் அருகே குறிப்பிட்ட ஒரு வீதி வழியாக சடலம் கொண்டு செல்லும்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் 15 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 4, 2023, 8:57 AM IST

கும்பகோணம் அருகே கோஷ்டி மோதல்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோவிலை அடுத்துள்ள மணவாளம்பேட்டை கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த ராசாத்தி என்பவர் உயிரிழந்தார். இவரது உடல் நேற்றிரவு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பின்னர், அதன் இறுதி ஊர்வலம் பாரதியார் தெரு வழியே சென்றது. அந்த தெருவில் மற்றொரு பிரிவினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாரதியார் தெருவில் வசிக்கும் மற்றொரு பிரிவினர், "உங்கள் பகுதியில் உள்ள கோயில்களில் மண்டகப்படிகள் நடத்த எங்களுக்கு அனுமதிக்காத நிலையில், இவ்வழியே பூக்களை வீசியவாறு சடலத்தை நீங்கள் எடுத்துச் செல்லலாமா?" என கேட்டுள்ளனர். அப்போது பெரியவர்கள் சிலர் முன்வந்து சமாதானப்படுத்த இறுதி ஊர்வலம் தொடர்ந்து சென்றுள்ளது.

ஆனால் தகனம் செய்து விட்டு வீடு திரும்பும்போது, மீண்டும் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி, பின்னர் மோதலாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பிலும், அமல்ராஜ், சங்கர், தேசிங்குராஜா, சரத், கார்த்திக், பிரபாகரன், கிருஷ்ணமூர்த்தி, சரவணன், ராஜா, சுரேஷ் உள்ளிட்ட 15 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மணவாளம் பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. ஆகவே, அங்கு மீண்டும் கலவரம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவம் குறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளர் ஜோதிராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அவர்களுடன் ஒன்றிய செயலாளர்கள் தமிழரசன், அய்யப்பன் ஆகியோரும் வந்திருந்தனர்.

மேலும், உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி கூறுகையில், இக்கலவரம் காவல் துறையினர் கண் முன்பே நடந்துள்ளது என்று குற்றம்சாட்டியதுடன், சுவாமிமலை காவல் நிலையத்தைச் சேர்ந்த சங்கர் என்ற காவலரே, ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும், இப்பிரச்னையில் காவல் துறையினர் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண தஞ்சை மாவட்ட ஆட்சியரும், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை - சென்னை காவல் ஆணையர் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details