திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன், தனலட்சுமி தம்பதியின் மகள்கள் கவிதா (13), சங்கீதா (14). தந்தை காலமானதையடுத்து, தாய் தனலட்சுமி, சிறுமிகள் இருவரும் பாட்டி விஜயலட்சுமியுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், விஜயலட்சுமியின் குடும்ப வறுமையின் காரணமாக, சிறுமிகள் இருவரையும் பணிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளார்.
அப்போது, நீடாமங்கலத்தைச் சேர்ந்த சகுந்தலா, கனகம் ஆகிய இரு இடைத்தரகர்கள் விஜயலட்சுமியைச் சந்தித்து கோயம்புத்தூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணிவாங்கித் தருவதாகக் கூறி, முன் பணமாக 20 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட விஜயலட்சுமி இரு பேத்திகளையும் பணிக்கு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளக்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பாட்டி விஜயலட்சுமி, இடைத்தரகர்கள் சகுந்தலா, கனகம் ஆகிய மூவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிந்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.