திருவாரூர்: முன்னாள் அதிமுக அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர், காமராஜ். இவர் தற்போது நன்னிலம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்து வருகிறார். முன்னாள் அமைச்சர் காமராஜ் 2015-2021ஆம் ஆண்டு அமைச்சராக பதவி வகித்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் அவரது நண்பர்கள் சந்திரகாசன், உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஆறு பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
குறிப்பாக 2015ஆம் ஆண்டு காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பெயரில் இருந்த சொத்து மதிப்பு ஒரு கோடியே 39 லட்சத்து 54 ஆயிரத்து 290 ரூபாயாக இருந்ததாகவும், 2021ஆம் ஆண்டு முடிவில் 60 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 39 ரூபாய் அளவாக சொத்துகள் உயர்ந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இதை வைத்து பார்க்கும்போது வருமானத்திற்கு அதிகமாக 58 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரத்து 879 ரூபாய் சொத்துகள் குவித்து இருப்பதாகத் தெரிவித்தது.
இதன் அடிப்படையில் திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழகம் முழுவதும் 51 இடங்களில் முன்னாள் அமைச்சர் காமராஜ்-க்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரது நெருங்கிய கூட்டாளிகளான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோரின் உடந்தையுடன் தஞ்சாவூரில் நார்க் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் சொத்துகளை வாங்கியது தெரியவந்தது.
அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் அவரது மகன்களான இனியன் மற்றும் இன்பன் ஆகியோரின் பெயர்களில் தஞ்சாவூரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர், வாசுதேவ பெருமாள் ஹெல்த் கேர் யூனிட் என்ற பெயரில் ஒரு நவீன பன்னோக்கு மருத்துவமனை கட்டியது தெரியவந்தது. இவ்வாறாக முறைகேடாக தனது வருமானத்திற்கு அதிகமாக 127 கோடியே 49 லட்சத்து 9 ஆயிரத்து 85 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டுபிடித்தனர்.