தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில், திருவாரூரில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ், அதிமுகவின் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரான ஏ.என். ஆர் பன்னீர்செல்வத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த முறை திமுக தலைவர் ஸ்டாலினும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து எவ்வளவு பொய் கூறினாலும் நாடாளுமன்றத் தேரதல்போல வெற்றி காண முடியாது. ஏனெனில், அதிமுக வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
’மத்திய அரசுடன் நட்பில் இருந்தால்தான் தேவையானது கிடைக்கும்’ - காமராஜ் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டுக் கதறினார். திருமாவளவன் மனம் நொந்துப் பேசினார். வைகோ ஓடிப்போய்விட்டு வேறு வழியில்லாமல் மீண்டும் வந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் என்றார். ஆனால் அதிமுக கூட்டணி மனமொத்த கூட்டணி. மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணி நட்பு இருந்தால் மட்டுமே மாநிலத்திற்கு தேவையானவற்றை கேட்டுப் பெற முடியும்" என்றார்.
இக்கூட்டத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.