நியாய விலை கடைகளில் தவறுகள் நடைபெற்றால் உடனடி நடவடிக்கை - அமைச்சர் காமராஜ் - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
திருவாரூர்: நியாய விலை கடைகளில் தவறுகள் நடைபெற்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் எச்சரித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட தலையூர், பில்லூர், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கைம்பெண் உதவித் தொகை , முதியோர் உதவித் தொகை பொதுமக்களின் அனைத்து கோரிக்கை மனுக்களையும் பெற்ற அமைச்சர், அது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து மாங்குடியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்த பின் ஜூன் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சக்கரை, ஆயில் உள்ளிட்ட இலவச ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காமராஜ் கூறியதாவது, "ஜூன் மாதத்திற்கான இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற ரேஷன் கடைகளில் தவறுகள் நடைபெற்றால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவச மின்சாரம் தொடர வேண்டும் என்பதில் அழுத்தமான கருத்துக்கள் கொண்ட கட்சி அதிமுக. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைத்திட வேண்டும் என்பது தான் எங்களுக்கு ஆசை. இதில் மாற்றுக்கருத்து கிடையாது" என்றார்.