திருவாரூர்: நீடாமங்கலம் அருகேவுள்ள ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழார்வன் (51). இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளராகவும், கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினராகவும், நீடாமங்கலம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில் தமிழார்வன் நேற்று (நவ.10) மாலை 4 மணியளவில் நீடாமங்கலம் வடக்குவீதி பகுதியில் கூட்டுறவு வங்கிக்கு அருகில் தனது காரில் வந்து இறங்கியுள்ளார். அப்போது அங்கு மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், தமிழார்வனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தமிழார்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், தமிழார்வனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
அரசுப் பேருந்து கண்ணாடிகள் உடைப்பு
இதற்கிடையே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்த தமிழார்வனின் உறவினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கொலை நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர்.
அங்கு வந்தவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த தமிழார்வனின் உடலைப் பார்த்து மிகுந்த ஆத்திரம் அடைந்து அந்தச் சாலையில் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் சென்ற அரசுப் பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.