திருவாரூர்:தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணையவழியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அச்சங்கத்தின் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையேற்றார்.
கூட்டம் முடிந்தபின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையைக் கட்டும் கர்நாடக முதலமைச்சரின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்து விவாதிக்க தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள், விவசாயிகள் கொண்ட கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டவேண்டும்.
மேகேதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தாமல் மவுனம் காக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கண்டித்து நாளை (ஜுன் 21) விவசாயிகள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். அரசியல் கட்சிகள், விவசாயிகள் அனைவரும் ஒட்டுமொத்த எதிர்ப்பைக் காட்டும் வகையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவேண்டும் என வேண்டுகிறேன்" என்றார்.