திருவாரூர்: மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, “மத்திய அரசு கொண்டு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி மாநகரத்தில் பல கோடி விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். கோரிக்கையை ஏற்று சட்டத்தை திரும்பப் பெற வேண்டிய மத்திய அரசாங்கம் உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கூறி அவதூறு பரப்புரைகள் செய்து விவசாயிகளின் போராட்டத்தை பிளவுபடுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விவசாயிகள் போர்வையில் போராட்டக்களத்தில் நக்சலைட்களும், தீவிரவாதிகளும் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள் என்று அப்பட்டமான பொய்யை தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை அவர் திரும்ப பெற வேண்டும். நியாயமான கோரிக்கையை ஏற்று சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு பிரதமர் உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
இதனை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கிறது. போராட்டக்குழு அறைகூவலுக்கு இணங்க தமிழ்நாட்டிலும் சுங்கச்சாவடிகளை தடுத்து நிறுத்துவது, ரயில் நிலையங்கள், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என நாங்கள் எச்சரிக்கிறோம். விவசாயிகள் போராட்டத்தில் பங்கு பெற வேண்டுகிறேன்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் பேட்டி டிசம்பர் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு இதனை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்” என கூறினார்.