திருவாரூர்:மன்னார்குடியில் பி.ஆர். பாண்டியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ''தமிழ்நாட்டில் நெல் காப்பீடு செய்வதை முற்றிலும் தடைசெய்திருப்பது உழவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. இது உழவர்களை மீண்டும் தற்கொலைக்குத் தூண்டும் செயலாகும்.
நடப்பு ஆண்டில் குறுவைக்கு பயிர் காப்பீடு செய்திட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது, சம்பாவிற்காவது பயிர் காப்பீடு செய்து இழப்பீடு பெறலாம் என்றிருந்த உழவர்களுக்கு, அதுவும் இன்று மறுக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.
இதிலிருந்து உழவர்களைப் பாதுகாப்பதற்காக முன்னாள் பிரதமர் வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசு உழவர்களுக்கு வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது.
மோடி அரசு காப்பீட்டுத் திட்டத்தில் தனியாரை அனுமதித்ததால், வணிக நோக்கத்தோடு செயல்படும் நிலை ஏற்பட்டு முழுமையாக உழவர்கள் பயன்பெற முடியாத நிலை தொடர்ந்தது. இதனால் தமிழ்நாடு அரசு தமக்கென தனி காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கிட வேண்டுமென உழவர்கள் வலியுறுத்திவருகிறோம்.
உழவர்களை வஞ்சிக்கும் செயல்
மத்திய, மாநில அரசுகள் காப்பீடு செய்வது, இழப்பீடு பெறுவது குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வழிமுறைகளைக் கண்டறியாமல் காலம் கடத்தின. தற்போது காப்பீட்டுத் திட்டத்தையே தமிழ்நாடு அரசு நெல்லுக்கு ரத்துசெய்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இது உழவர்களை வஞ்சிக்கும் செயலாகும்.
மேலும் 2021-22 சாகுபடி பருவத்திற்கு நெற்பயிர் காப்பீடு செய்ய தடைவிதித்திருப்பதும், அதற்குப் பேரிடர் காலத்தில் பாதிப்பு ஏற்படுமேயானால் தமிழ்நாடு அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய அரசின் கொள்கைப்படி உழவன் தனது நிலத்திற்கு காப்பீடு செய்து இழப்பீடு பெறுவது உரிமையாகும் என்ற நோக்கத்தில் சட்டமாகக் கொண்டுவரப்பட்ட திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தன் விருப்பத்திற்கு நெற்பயிர் காப்பீடு செய்வதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பது தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் செயலாகும்.