திருவாரூர்:திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிவர பாதுகாக்கப்படாததால் மின் கம்பிகள் விவசாய நிலங்களிலும் சாலையோரங்களிலும் தாழ்வாகச் செல்வதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
இதில், குறிப்பாக நன்னிலம் அருகே உள்ள திருக்கொட்டாரம், பழையார், கமுதக்குடி, முகந்தனூர், மாத்தூர், பேரளம், கொல்லூமாங்குடி, குருங்குளம் உள்ளிட்டப் பல இடங்களில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகவும் மரங்களின் நடுவிலும் செல்வதால் எப்போது வேண்டுமானாலும் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரியும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் அச்சத்திலுள்ளனர்.
மேலும், விவசாயப் பணிகளில் ஈடுபடும்போது உழவுப்பணியை மேற்கொள்ளும்போதும் அறுவடை நேரங்களிலும் இயந்திரங்கள் செல்வதற்கு மிகுந்த இடையூறாக இருப்பதாலும் வைக்கோல் ஏற்றிச்செல்லும்போது அவ்வப்போது தீப்பற்றி எரிந்து விடும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.