தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமிக்கு 'காவிரி காப்பாளர்' பட்டம் வழங்கிய விவசாயிகள் - காவிரி டெல்டா

திருவாரூர்: காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு காவிரி காப்பாளர் பட்டம் வழங்கி விவசாயிகள் கெளரவித்துள்ளனர்.

edappadi-palanisamy
edappadi-palanisamy

By

Published : Mar 8, 2020, 10:32 AM IST

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிப். 9ஆம் தேதி அறிவித்தார். அதனால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருவாரூரில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன் தலைமை வகித்தார்.

இதில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி மேடைக்கு மாட்டுவண்டியில் அழைத்து வரப்பட்டார். அவரை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பாண்டியன் வரவேற்றார். அதன்பின் அவருக்கு விவசாயிகள் சார்பில் 'காவிரி காப்பாளர்' என்ற பட்டத்தை மன்னார்குடி காவிரி ரங்கநாதன் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'நானும் ஒரு விவசாயி', முதலமைச்சராக இருக்கும் காரணத்தால் மனதிலிருப்பதை வெளிப்படையாக பேச முடியவில்லை. ஆனால் மனதிலிருந்த சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தைக் கொண்டுவர முடிந்தது. இச்சட்ட முன்வடிவை தாக்கல் செய்திருக்கிறேன். அதற்கு முன் ஒன்பது ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோதும், எந்த சட்ட முன்வடிவையும் நான் கொண்டு வந்ததில்லை. எனக்கு விவசாயி என்பது பெருமை. லாபம் குறைந்த காரணத்தால் விவசாயம் மங்கியிருக்கிறது. ஆனால் விவசாயிகள் எதற்கும் பயப்பட மாட்டார்கள். தமிழ்நாட்டில் 100க்கு 65 பேர் விவசாயிகள், அவர்களது உணர்வை புரிந்துகொள்ள விவசாயியான என்னால் முடியும்.

மத்திய அரசுக்குத்தான் இப்படி அறிவிக்க அதிகாரமிருக்கிறது, மாநில அரசுக்கு இல்லை என நாடாளுமன்றத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் சிலர் வெளிநடப்பு செய்தனர். யார் விவசாயி பக்கம் நிற்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சர் மாநில அரசுக்கு அனைத்து உரிமையுமிருக்கிறது என்று சொல்லிவிட்டார்.

மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி

குடிமராமத்து திட்டம் கொண்டு வந்தபோது எப்படி செய்வது என்று திகைத்து முதலில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பரிட்சார்த்த ரீதியில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்பின் சிறப்பான திட்டமாக மாறி இரண்டாவது ஆண்டு ரூ.350 கோடியும், மூன்றாவது ஆண்டில் ரூ.499 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது.

காவிரி நீரில் 20 சதவீத நீர் வீணாகிறது. அதனை வீணாகாமல் தடுக்க 2 ஆயிரத்து 298 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதேபோல் காவிரி வடிநில பாசன பகுதிகளை மேம்படுத்த 5 ஆயிரத்து 590 கோடி ரூபாயில் திட்டம் தொடங்க உள்ளது. விவாசாயிகளுக்கு மொத்தம் ஏழாயிரம் கோடி ரூபாய் செலவில் விரைவில் பல திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,

  • திருவாரூர் மூங்கில்குடியில் உணவு பதப்படுத்தும் தொகுப்புகள் அமைக்க மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
  • ஒருங்கிணைந்த வேளாண் வணிக மாதிரி அங்காடிகள் ரூ.15 கோடி செலவில் அமைக்கப்படும்.
  • நெல் ஜெயராமனை போற்றும் வகையில் அவரது பெயரில் நீடாமங்கலத்தில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.
  • பசுமைக்குடில் சாகுபடி, பந்தல் சாகுபடி, நிலம் நிலப்போர்வை உள்ளிட்டவைகளுக்கு ரூ.33 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
  • கும்பகோணத்தில் வெற்றிலை சிறப்பு மையம் மூன்று கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
  • முந்திரி சாகுபடியில் நடவு சாகுபடியை தொழில்நுட்பம் மூலம் செய்திட 2 ஆயிரத்து 500 ஏக்கரில் 6.27 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • 47 இடங்களில் துணை வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டித்தரப்படும்.
  • புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் அறிந்துகொள்ள, அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்ல 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
  • சூரிய மின்சக்தி மோட்டார்கள் வாங்க மானியங்கள் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், “காவிரியை காக்க வேண்டும் என்பதற்காக எனக்கு காவிரி காப்பாளர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதனை கண்டிப்பாக செய்வேன்” என நம்பிக்கை தெரிவித்தார். அவருடன் இந்தவிழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், காமராஜ், ஓ.எஸ். மணியன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 'மகளிர் தின வாழ்த்துகள்' கூறிய முதலமைச்சர் பழனிசாமி!

ABOUT THE AUTHOR

...view details