திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள பேரளம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பேரளம் வழியாக செல்லும் வாஞ்சியாற்றிலிருந்து பிரிந்து வரும் ஏ சேனல் தென்பாதி பாசன வாய்க்காலை நம்பி சுமார் 13 கிராமங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. குறிப்பாக திருமீச்சூர், தென்பாதி, வடபாதி, பேரளம் உள்ளிட்ட கிராம மக்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 5ஆண்டுகளுக்கும் மேலாக ஏ சேனல் தென்பாதி வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாத காரணத்தினால், காட்டாமணக்கு, நாணல்கள் மண்டி தண்ணீர் செல்ல முடியாத சூழல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். முன்பு ஒரு முறை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் மக்களை கொண்டு இந்த சேனல் பெயரளவுக்கு மட்டுமே தூர்வாரப்பட்டதால் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறமுடிவதில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.