திருவாரூர்:திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா தாளடிக்கான அறுவடை பணிகள் தொடங்கித் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருவது வழக்கம்.
ஆன்லைன் முறையால் அவதி
ஆனால் தற்போது பழைய முறையை நடைமுறையில் இல்லாததால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். தற்போது தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்வதற்கு முன்பு ஆன்லைன் மூலம் பதிவு செய்த பிறகே நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் சிறு குறு விவசாயிகள் அதிகமாக விவசாயம் செய்வதால் அனைவருக்கும் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவது என்பது சிரமமாக உள்ளது. அதேபோல் ஆன்லைன் பதிவு முறையில் பதிவு செய்யும் போது நெட்வொர்க் பிரச்சினைகள் அடிக்கடி வருவதாலும் விவசாயிகளுக்கு காலதாமதம் ஏற்ப்படுவதால் பழைய முறையை நடைமுறைபடுத்தினால் எளிதாக இருக்கும் எனத் தெரிவித்தனர்.