திருவாரூர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (30). இவர் அதே பகுதியில் வெற்றிலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் சாகுல் ஹமீது வெற்றிலை வியாபாரம் செய்வதற்காக கங்களாஞ்சேரி பகுதிக்குச் சென்றுள்ளார். வேலைக்குச் சென்றவர் நேற்று மதியம் முதல் வீட்டுக்கு வரவில்லை என்று வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும் அவரை தேடி அலைந்துள்ளனர்.
இதனையடுத்து இன்று காலை கங்களாஞ்சேரியிலுள்ள வெட்டாற்றில் அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து உடனே அப்பகுதி மக்கள் நன்னிலம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற, காவல் துறையினர் சாகுல் ஹமீது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வெற்றிலை வியாபாரம் செய்ய வந்த சாகுல் ஹமீது நேற்று மதியம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து நன்னிலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.