திருவாரூர் மாவட்டம், காட்டூரில் உள்ள டாக்டர் கலைஞர் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவு மண்டபத்தில் உள்ள அவரின் உருவச்சிலைக்கு திமுக பொருளாளர் டி. ஆர். பாலு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டத்தைப் பற்றி பிரதமர் கூறுகிறார் என்றால் அது அரசியல். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் கூறுகிறார் என்றால் அது பிதற்றல். வேளாண் சட்டத்தைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் முதலமைச்சர் உளறி வருகிறார்.
திமுக-வின் அடிமட்ட தொண்டர்கள் வரை, வேளாண் சட்டம் பற்றி தெளிவாக எடுத்துக் கூறப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியை தமிழ்நாட்டிலிருந்து அகற்ற இந்த வேளாண் சட்டம் ஒன்றே போதுமானது. எனவே, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் கோட்டைக்குச் செல்வது உறுதியாகிவிட்டது. 2ஜி வழக்கில் திமுகவைச் சேர்ந்த கனிமொழி, ராஜா ஆகிய இருவரையுமே உச்ச நீதிமன்றம் குற்றவாளி இல்லை என அறிவித்துள்ளது.
இருப்பினும், அதிமுகவினர் அரசியல் நிமித்தமாக வழக்கு தொடர்கிறார்கள். அதைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். எம்.ஜி.ஆர் காலத்தில் தான் அதிமுக கட்சி இருந்தது தெரியும். தற்போது அக்கட்சியில் குழப்பம் நீடிக்கிறதா என்பது பற்றி நாங்கள் கவலைப்படத் தேவையில்லை. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய பொறுப்பில் இருந்து வருவதால் சேப்பாக்கம் தொகுதி மட்டுமல்ல தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் எந்த தொகுதியிலும் அவர் நின்று வெற்றி பெறுவார்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தற்போது தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்கும் அவசியம் இருந்து வருவதால் சென்னையில் இருந்து மன்னார்குடி, திருவாரூர், நாகை காரைக்கால் பகுதிகளில் ரயில் இயக்குவது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.