தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று (நவ16) அனைத்து மாவட்டங்களுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.
18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமும் அறிவிக்கப்பட்டது.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், உள்ளிட்ட பல மாற்றங்களுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
இதனையடுத்து, திருவாரூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சாந்தா வெளியிட்டார்.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சத்து, 344 ஆண் வாக்காளர்களும் , 5 லட்சத்து 15 ஆயிரத்து 171 பெண் வாக்காளர்களும், 40 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். அந்த வகையில், மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 15 ஆயிரத்து 555 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மதுரை மாவட்டத்தில் பெண் வாக்காளர்களே அதிகம் - வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு