திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா, தாளடி பணிகள் நிறைவுபெற்று, கோடை சாகுபடியான பயறு, உளுந்து சாகுபடி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
குறிப்பாக, நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உழவர்கள் பயறு, உளுந்து சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது அதற்கான அறுவடைப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த ஆண்டு உளுந்து மூட்டை ஒன்றுக்கு எட்டாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இந்த ஆண்டு ஏழாயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக உழவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நன்னிலம் பகுதியில் உளுந்து பயிரிட்ட உழவர்கள் கோரிக்கை இது குறித்து பேசிய உழவர்கள், "அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் நெல் மூட்டைகள் கொள்முதல்செய்யப்படுவது-போல பயறு, உளுந்து வகைகளையும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களே கொள்முதல்செய்ய வேண்டும். நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு மூன்றாயிரம் ரூபாய் விலை நிர்ணயம்செய்வது-போல பயறு மூட்டை ஒன்றுக்கு உரிய விலை நிர்ணயம்செய்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். தனியார் முதலாளிகள் குறைந்த விலைக்கே பயறு மூட்டைகளைக் கொள்முதல் செய்துவருவதால் உழவர்களுக்குப் பெரிய இழப்பு ஏற்படுகிறது.
இதனால் உழவர்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில்கொண்டு உளுந்து மூட்டை ஒன்றுக்கு எட்டாயிரம் ரூபாய் என உரிய விலை நிர்ணயம்செய்து அரசே நேரடியாகக் கொள்முதல்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.