2020-21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயம், தனிநபர் வருமான வரி, பொதுத்துறை நிறுவனங்கள் சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
வெளியாகியுள்ள பட்ஜெட் குறித்து டெல்டா மாவட்ட விவசாயகள் சிலரிடம் ஈடிவி பாரத்தின் சார்பாக கருத்துக்களை கேட்டபோது, பாஜக அரசு ஆட்சியமைத்ததிலிருந்து ஒவ்வொரு நிதி ஆண்டிலும் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கபடும் என அறிவித்துவருகிறது. அதே இந்த ஆண்டும் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கபடும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. அதற்கான எந்த முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
விவசாயத்திற்கென 12 ஆயிரத்து 955 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களை விவசாயத்தில் ஈடுபடுத்தும் நோக்கில் தானிய லட்சுமி திட்டம், வேளாண் விளைபொருட்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதற்காக குளிர்சாதன ரயில் சேவை, ஏற்றுமதி செய்வதற்கு விமான சேவை போன்ற அறிவிப்புகள் வரவேற்கக்கூடியதாக இருந்தாலும், நெல்லுக்கான உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற எம்.எஸ் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை ஏற்க, விவசாயிகள் நீண்ட கால கோரிக்கைகளை ஏற்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றனர்.