திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட சிறப்பு கூட்டம் நேற்று (டிச.27) திருவாரூரில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடன் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "வடகிழக்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும், இதைத்தொடர்ந்து, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி பகுதியில் அதிகன மழை பெய்ததால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்துள்ளனர், மனித உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குடும்ப அட்டைகளுக்கு 6 ஆயிரம் மற்றும் கால்நடைகள், விவசாயிகள், இறந்தவர்கள் என தமிழக அரசின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் கட்டடங்கள், சாலைகள், வீடுகள் என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இவைகள் அனைத்தையும் மீண்டும் சரி செய்ய வேண்டுமென்றால், மாநில அரசால் மட்டுமே முடியாது. மத்திய அரசும் உதவி செய்ய வேண்டும். பேரிடர் நிதி என ஒன்று உள்ளது, பேரிடர் கமிட்டி அதற்கு தலைமை தாங்குகிறார்.
மாநில அரசு நிதி தேவை என்கிற வேலையில், ஏற்கனவே வந்த மத்திய குழு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மத்திய அரசிடம் நேரில் சென்று வலியுறுத்தியுள்ளார். அவர்கள் கொடுத்த நிதி என்பது ஆண்டுதோறும் வழக்கமாக கொடுக்க வேண்டிய நிதியை மட்டும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட நிதி கொடுக்கவில்லை.
இதற்கு மாறாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேட்டி கொடுத்துள்ளார். அதாவது இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஏன் இந்தியா கூட்டணியில் (INDIA Alliance) முதல்வர் கலந்து கொண்டுள்ளார் என நிதி அமைச்சர் கேட்கிறார். அவர் அதில் மட்டும் கலந்து கொள்ளவில்லை பிரதமரையும் சந்தித்துள்ளார், அதைப் பற்றி ஏன் நிதியமைச்சர் கூறவில்லை.