திருவாரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை ஏற்பாடு தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில், நகராட்சி அலுவலகம், ரயில் நிலையம் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, "திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மருத்துவக்கல்லூரி, மன்னார்குடி தலைமை மருத்துவமனைகளில் போதுமான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் குறித்து திருச்சி விமான நிலையத்திலிருந்து தகவல்கள் வந்து கொண்டிருப்பதால் இருமல், சளி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை கண்காணிக்கப்பட்டு மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை மேலும், “சமூகவலைதளங்களில் கரோனா வைரஸ் குறித்து அவதூறு பரப்பிய இரு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் மூவருக்கு கரோனா தொற்று!