இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173ஆக உயர்ந்துள்ளது. இதில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் முதல் கட்டமாக 13 பேருக்கு 14 நாட்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களுக்கு நோய் தொற்று தாக்கம் குறித்து ரத்தப் பரிசோதனை மீண்டும் இரண்டு முறை எடுக்கப்பட்டது. இதில் 7 பேர் கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட்டு குணமடைந்து இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.