உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதுவரை சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இது மட்டும் அல்லாமல் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் 160க்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும் மூன்று பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனாவை தடுக்க கிருமி நாசினி வழங்கல்! இந்நிலையில், அரசு சார்பில் கரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு மக்கள் அதிகமாக ஒன்று கூட வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேருந்து நிலையம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு, அவர்களது கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதேபோல நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அந்தக் குழு சென்று பொதுமக்கள் சுகாதாரமாக இருப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை காவல் துறை உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த அரசுப் பணியாளர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களுக்குச் சென்று பொதுமக்கள் சுகாதாரமாக இருக்க அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா தொற்று: தமிழ்நாட்டில் எண்ணிக்கை 3ஆக உயர்வு!