இலங்கை, குமரிக்கடல் பகுதியையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் இரண்டு நாள்களாக லேசான மழை பெய்துவந்த நிலையில் இன்று (ஜன. 11) காலை முதல் கனமழை பெய்துவருகிறது.
குறிப்பாக நன்னிலம், ஆண்டிப்பந்தல், பேரளம், கொல்லுமாங்குடி, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது.
தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் ஓரிரு தினங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.