திருவாரூர் மாவட்டத்தில் 22 வயதுடைய பெண் காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், அந்தப் பெண் காவலர் பணி நிமித்தமாக தஞ்சைக்கு சென்று விட்டு, இரவு பேருந்தில் திருவாரூருக்கு வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவருடன் பணியாற்றும் சற்குணம் (32) என்ற காவலர், அந்தப் பெண் காவலரை செல்போனில் தொடர்புகொண்டு கொரடாச்சேரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வதாக கூறியுள்ளார். அதன்படி தன்னுடன் பணிபுரியும் காவலர் அழைத்துச் செல்வதாகக் கூறியதால், கொரடாச்சேரி வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கி, சற்குணத்துடன் அந்த பெண் காவலர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
கொரடாச்சேரியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தண்டலை கிராமம் அருகே சென்றபோது பெண் காவலருக்கு பாலியல் ரீதியாக சற்குணம் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் காவலர் சற்குணத்திடம் இருந்து தப்பித்து அவருடன் பணிரியும் மற்றொரு காவலரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார்.