2020 - 21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயம், தனிநபர் வருமான வரி, பொதுத்துறை நிறுவனங்கள் சார்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதில் எல்.ஐ.சி. எனப்படும் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் முதலீடுகள் திரும்பப் பெறப்படும் எனவும், அதன் பங்குகள் பொதுமக்களுக்கு விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கதக்கது - எல்.ஐ.சி ஊழியர்கள் காட்டம் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவாரூர் எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த செந்தில் குமார் கூறுகையில், “அதிகமான பாலிசிதாரர்களையும், கோடிகணக்கான நிதிகளைக் கொண்டு வெகுஜன மக்களின் நன்மதிப்போடு, நல்ல முறையில் இயங்கிவரும் எல்.ஐ.சி. நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது கண்டிக்கதக்கது. இதனைக் கண்டித்து ஒரு மணி நேரம் சேவை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்.
இந்நிறுவனமும், மக்களின் பணமும் பாதுக்காக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் வரும் காலங்களில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.