திருவாரூர்:மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது என்பது நமது நாட்டின் எதிர்காலத்திற்கு கேடு விளைவிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 20) திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு. சர்வாதிகாரம் என்பது காட்டுத் தீ என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள்.
பாஜக கடந்த பத்தாண்டுக் காலமாகப் பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத் தீயை அணைக்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. அதற்கான முதல் ஜனநாயக விளக்கை, பாட்னாவில் ஏற்றுவதற்கான ஏற்பாட்டை நிதிஷ்குமார் தொடங்கி வைக்க இருக்கிறார். நானும் பாட்னா செல்கிறேன். உங்களுடைய அன்போடு செல்கிறேன். உங்களுடைய நம்பிக்கையோடு செல்கிறேன். ஜனநாயகப் போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக நானும் பங்கெடுக்க இருக்கிறேன்.
இந்திய ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய நெருக்கடியான காலத்தில் இன்றைக்கு நாம் இருக்கிறோம். இதைச் செய்யாவிட்டால் மூவாயிரம் - நான்காயிரம் ஆண்டுப் பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும். கலைஞரின் உயிரினும் உயிரான உடன்பிறப்புகளே. இங்கே அமர்ந்திருக்கிறீர்களே நீங்கள் தான் கலைஞருடைய உடன்பிறப்புகள். இதனை நீங்கள் செய்யாவிட்டால் வேறு யாராலும் இதைச் செய்ய முடியாது.
இதையும் படிங்க:Kalaignar Kottam: திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!