திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது கற்பகநாதர்குளம் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், தெற்கு பண்ணைசேத்தி பகுதியைச் சேர்ந்தவர் வாழமுத்து (85 ). இவருக்கு அன்பு ராஜன்(50) என்ற மகனும், பேரழகன் (20) என்ற பேரனும் உள்ளனர்.
கடந்த வாரம் வாழமுத்து அம்மை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது மகன் அன்புராஜனுக்கும் அம்மைத் தொற்று நோய் பரவி அவதிப்பட்டு வந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அம்மை நோய்க்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையையும், மகனையும் பறிகொடுத்த நிலையில், பேரன் பேரழகனுக்கும் அம்மை நோய் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் தனியார் கல்லூரியில் தொழிற்கல்வி மூன்றாம் ஆண்டு படித்து வரும் அவர் கல்லூரிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையாகி விட்டார். மேலும் இதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த மேலும் சிலருக்கும் அம்மை நோய் தாக்கியது. இதனால் அவர்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இச்சம்பவங்களால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுகாதாரத்துறையினக்கு தகவல் தெரிவித்தனர்.