திருவள்ளூர்: 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுவை உள்ளடக்கிய 40 தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில், திமுக கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களைச் சந்தித்து, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கி வருகிறார்.
அதனடிப்படையில் ஏற்கனவே டெல்டா மண்டலம், மேற்கு மண்டலம், தென் மண்டலம், வடக்கு மண்டலம் என 4 பகுதியாக நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்று ஆலோசனை வழங்கினார். இந்நிலையில் திமுக சென்னை மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர் திடலில் நாளை (நவ. 5) நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் திமுக சென்னை மண்டலத்தை உள்ளடக்கிய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 37 சட்டமன்ற தொகுதிகள், 6 நாடாளுமன்ற தொகுதிகள் அதற்குட்பட்ட 11 ஆயிரத்து 569 திமுக வாக்குச்சாவடி முகவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருவள்ளூரில் அமைக்கப்பட்டுள்ள திமுக சென்னை மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாட்டு மேடை, நாடாளுமன்ற முகப்பு வடிவிலான தோற்றத்துடன் இணைந்து வள்ளுவர் கோட்டம் வடிவில் தயாராகி வருகிறது.
மேலும், முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி, பெரியார், அண்ணா, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் இடம் பெற்று உள்ளன. மேலும், திமுக ஆட்சியின் சாதனைகளான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை போன்ற திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் பேனர்களும் இடம் பெற்றுள்ளன.
மழை பெய்தாலும் நிகழ்ச்சி தடைபடாமல் நடைபெறும் வகையில் பன்னிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் கட்சியினர்களுக்கு மதிய வேளையில் அசைவம் மற்றும் சைவ உணவுகள் பரிமாறப்பட உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது. இதற்காக திருச்சியை சேர்ந்த ஒரு உணவு தயாரிப்பு குழுவுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நேபாளத்தில் நிலநடுக்கம்! 70 பேர் உயிரிழப்பு! டெல்லியில் நில அதிர்வை உணர்ந்த மக்கள்!