திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியத்தை முடக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காவிரி மேலாண்மையை ஜல்சக்தி துறை நிர்வாக கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அரசாணை நகலை தீயிட்டு எரித்து கண்டன முழங்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரோனா நோய் தாக்குதலில் உலகம் முடங்கியுள்ள நிலையில், அவசர அவசரமாக தனது அரசியல் சுயலாபத்திற்காக தமிழ்நாடு போராடி பெற்ற உரிமையை குழி தோண்டி புதைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆணையத்தை முடக்கும் விதமாக ஜல்சக்தி துறை நிர்வாக கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் குடியரசுத் தலைவரால் கடந்த 20ஆம் தேதியன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஆணையம் எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றுவதற்கு தேவையான உதவிகளை மட்டுமே மத்திய அரசு செய்திட வேண்டும். இதற்கு மத்திய அரசோ, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோ கட்டுப்பட மறுக்கும் பட்சத்தில் நேரடியாக ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண வேண்டும் என மிகத் தெளிவாக உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் வரையறுத்துள்ளது. காவிரி ஆணையம் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது.