திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருமிச்சியூர் கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிப்பிட வசதிகள் என எதுவும் இல்லை என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான தென்பாதி கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, மன்மதன் கோவில் தெரு, மேலத்தெரு உள்ளிட்ட 13 தெருக்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு குடிநீர்த்தொட்டி மட்டும் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இக்குடிநீர் தொட்டியிலிருந்து மட்டும் தண்ணீர் செல்வதால் பல கிராமங்களுக்கு சரிவர குடிநீர் செல்வதில்லை எனவும், இதனால் மக்கள் இரண்டடி ஆழத்திற்கு குழி தோண்டி தண்ணீர் எடுத்தாலும் குடிநீர் வருவதில்லை என்றும் கூறுகின்றனர்.
மேலும் சாலை கடந்த இருபது ஆண்டுகள் முன்பு போடப்பட்டதாகவும், இன்றும் இந்தச் சாலை சரிவர சீரமைக்கப்படாததால் அவசர காலத்தில் 108 ஆம்புலன்ஸ், ஆட்டோ வருவதற்குக்கூட வழியில்லாததால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்ர்.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதில்கள் இல்லாத கிராமம் மேலும், மழைக் காலங்களிலும், இரவு நேரத்திலும் இந்தச் சாலையை முழுவதுமாகப் பயன்படுத்த முடியாத நிலையில் பள்ளி மாணவர்கள் மிதிவண்டியில் செல்லக்கூட தயக்கம்காட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும், வட்டாட்சியரிடமும் மனுக்கள் கொடுத்தும், பலமுறை போராட்டங்கள் செய்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 24 ஆண்டுகளுக்கு பிறகு கொத்தடிமைத் தொழிலாளர் கணக்கெடுப்பு!