மயிலாடுதுறை: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அகிலாம்பேட்டையைச் சேர்ந்தவர் பூங்குழலி விஜயகுமார். இவர், கருவுற்ற நாளிலிருந்து மயிலாடுதுறை மகாதானத்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவருக்கு ஜூலை 19ஆம் தேதி பிரசவத்திற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூன் 21ஆம் தேதி வழக்கம்போல் அப்பெண் மருத்துவமனையில் ஆலோசனை பெற சென்றுள்ளனர். அங்கு, தினமும் சந்திக்கும் மருத்துவர் இல்லாததால் வேறு ஒரு பெண் மருத்துவரிடம் பரிசோதித்துள்ளார். ஆனால், அந்த பெண் மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் இல்லையென்றால் குழந்தைக்கு ஆபத்து எனக் கூறியுள்ளார்.
ஆண் குழந்தை உயிரிழப்பு:
இதனையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு நேற்று (ஜூன்23) காலை அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குறைமாதத்தில் பிறந்த குழந்தையை இன்குபேட்டரில் வைத்து கண்காணித்து வந்தனர். உரிய மருத்துவர் கண்காணிப்பு இல்லாமல், செவிலியரே குழந்தையை தூக்கிச்சென்று தாயிடம் நான்குமுறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வைத்துள்ளார். மாலை 6 மணிக்கு குழந்தைக்குப் பால் கொடுக்கபட்டு செவிலியர் தூக்கிச் சென்ற நிலையில் இரவு 7 மணிக்கு திடீரென குழந்தை இறந்துவிட்டதாக செவிலியர் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ந்துபோன குழந்தையின் பெற்றோர் நன்றாக இருந்த குழந்தை எப்படி இறந்தது, மருத்துவர் ஒருவர் அருகில் இருந்து பார்த்திருந்தால் இதுபோல் நடந்திருக்காது. மருத்துவமனையின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக கூறி தகராறில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திலிருந்த கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர்.