திருவாரூர்:சமீபத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சனாதனம் குறித்த இந்த கருத்திற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் திருவாரூரில் அருகே உள்ள கலைஞர் கோட்டத்தில் இன்று செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சனாதன எதிர்ப்பு குறித்த கருத்தரங்கு திமுக சார்பில் நடத்தப்படுவதாக இருந்தது. இந்த கருத்தரங்கில் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி கலந்து கொண்டு உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்தது.
நேற்று இந்த கருத்தரங்கில் மாணவிகள் சனாதன எதிர்ப்பு குறித்த தங்களது ஆழ்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவதாக திருவாரூர் அருகிலுள்ள கிடாரங்கொண்டான் திரு.வி.க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பொறுப்பு ராஜாராமன் அனைத்து துறை தலைவர்களுக்கும் வகுப்புகளில் வாசிக்க கேட்டுக் கொண்டு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
இந்த சுற்றறிக்கைக்கு வலதுசாரி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரி முதல்வரை கண்டித்து இன்று செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 3 மணி அளவில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அறிவித்திருந்தார்.